காந்தி குடும்பத்தைச் சேராதவருக்கு காங். தலைவர் பதவி…மனம் திறந்த பிரியங்கா காந்தி
காந்தி குடும்பத்தை சாராதவருக்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை தரவேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-20

‘நாளைய இந்தியா: அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி துறந்த நேரத்தில், பிரியங்கா காந்தியை நூலாசிரியர்களான பிரதீப் சிப்பர், ஹர்ஷ் ஷா பேட்டி கண்டு இந்த புத்தகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் யாரும் (காந்தி குடும்பத்தில் இருந்து) தலைவராக இருக்கக்கூடாது என்று அவர் (ராகுல் காந்தி) கூறி இருக்கிறார். நான் இதில் அவருடன் முழுமையாக உடன்படுகிறேன். கட்சி தனக்கான சொந்த பாதையை கண்டறிய வேண்டும். கட்சிக்கு வேறு ஒரு தலைவர் வந்தால் அவர்தான் எனது தலைவர். அவர் நான் உத்தரபிரதேசத்தில் பணியாற்ற வேண்டாம், அந்தமான் நிகோபருக்கு போக வேண்டும் என்று சொன்னால், நான் அங்கே போக தயாராக இருக்கிறேன். இது என்னைப் பொறுத்ததுதான். நான் இதற்காக வருத்தப்பட மாட்டேன். நான் விரும்பியதை செய்யப்போவேன். நாங்கள் கட்சியை ஜனநாயகமாக்குவதில் உண்மையிலேயே நம்பிக்கை வைத்துள்ளோம்.
காங்கிரசில் நான் தலைமைப் பொறுப்பை ஏற்பது பற்றி கேட்கிறீர்கள். முதலில், நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புவேன். எனக்கு எனது சகோதரர்தான் தலைவர். அவர்தான் எப்போதும் இருப்பார். இரண்டாவது, பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவதற்கு உத்தர பிரதேசத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல ஆற்றல் படைத்த நூற்றுக்கணக்கானோரை நான் பார்க்கிறேன். இளைய தலைவர்கள், நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். நான் எதிர்காலத்தைப் பற்றி கூறமுடியாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால், கட்சியை வழிநடத்தும் திறமை உள்ள நிறைய பேர் இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
கட்சியை ஜனநாயகப்படுத்துவதற்கு எனது சகோதரர் நிறைய பணியாற்றி இருக்கிறார். இளைஞர் காங்கிரசிலும், தேசிய மாணவர்கள் யூனியனிலும் அவர் தேர்தல்களை நடத்தி இருக்கிறார். கட்சியில் நிறைய புதுமுகங்களை, இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்த வாய்ப்பு தர விரும்பினார். உண்மையிலேயே இதற்காக அவர் மீது கட்சிக்குள்ளேயே தாக்குதல் நடந்தது.
நான் இப்போது தரையில் நிற்கிறேன். இன்னும் நிறைய காலம் ஆகும். நிறைய கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. உள்ளபடியே சொன்னால் இதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கே கட்சியை கட்டமைக்க முடிந்தால், அது கட்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும். எனவே நான் அங்கே கவனம் செலுத்தவே விரும்புகிறேன். நான் மிகுந்த தாழ்மையோடு அங்கே கடினமாக உழைக்கத்தான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.