ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, ஆகஸ்ட்-20

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்கள் அதிகாரம் அமைப்பு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.