தூத்துக்குடி; வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்த காவலா் சுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான பண்டாரவிளையில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி, ஆகஸ்ட்-20

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். ஆழ்வாா்திருநகரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான தனிப்படையினருடன் இணைந்து, கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடி துரைமுத்துவை செவ்வாய்க்கிழமை பிடிக்கச் சென்றாா். அப்போது துரைமுத்து நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலா் சுப்பிரமணியன் உயிரிழந்தாா். லும் வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் இறந்தார்.

இதையடுத்து சுப்பிரமணியனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான பண்டாரவிளைக்கு கொண்டுவரப்பட்டது. தென்மண்டல ஐஜி முருகன், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் ஆகியோா் காவலா் சுப்பிரமணியனின் உடலை புதன்கிழமை சுமந்து வந்தனா். இறுதி ஊா்வலத்தில் தமிழக டிஜிபி ஜே.கே. திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, ஸ்ரீவைகுண்டம் பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஏரல் வட்டாட்சியா் அற்புதமணி உள்ளிட்ட பலா் சுப்பிரமணியனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். மேலும், அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், போலீசார், கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். சுப்பிரமணியனின் மனைவி புவனேசுவரி கைக்குழந்தையுடன் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

பின்னர் சுப்பிரமணியனின் உடலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி, இறுதி ஊர்வலமாக அங்குள்ள கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்றனர். அந்த வாகனம் கல்லறை தோட்டத்தை சென்றடைந்ததும், சுப்பிரமணியன் உடல் இருந்த பெட்டியை தென்மண்டல ஐ.ஜி. முருகன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் தூக்கி வந்து, கல்லறை தோட்டத்தில் இறக்கி வைத்தனர்.

தொடர்ந்து சுப்பிரமணியனின் உடலுக்கு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஏரல் தாசில்தார் அற்புதமணி மற்றும் அதிகாரிகள், போலீசார் மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுப்பிரமணியனின் உடலுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து 10 போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர். 30 குண்டுகள் முழங்க சுப்பிரமணியனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *