தற்கொலை என்பது முடிவல்ல என மாணவர்கள் உணர வேண்டும்.. அமைச்சர் S.P.வேலுமணி

கோவையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எக்காரணத்திற்காகவும் தற்கொலை ஒரு முடிவல்ல என்பதனை மாணவர்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை, ஆகஸ்ட்-19

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியர். இவரது மகள் சுபஸ்ரீ (19). இவர் நேற்று வீட்டில் இருந்த போது அவருடைய அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சுபஸ்ரீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததுள்ளார். கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாரானார்.

இந்நிலையில், அடுத்த மாதம் நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ என அவர் மன குழப்பத்தில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட பதிவில், கோவையில் நீட் தேர்வு குறித்த கவலை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.மாணவியின் பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரினும் மேலான ஒன்று இந்த உலகில் வேறு எதுவுமில்லை, எக்காரணத்திற்காகவும் தற்கொலை ஒரு முடிவல்ல என்பதனை மாணவர்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *