சூடு பிடிக்கும் 2வது தலைநகரம் விவகாரம்.. மதுரையா, திருச்சியா? – அமைச்சர்கள் முரண்பட்ட கருத்தால் சலசலப்பு..!!

சென்னை, ஆகஸ்ட்-19

தமிழகத்தில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தலைதூக்கத் தொடங்கி உள்ளது. மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், அமைச்சர் செல்லூர் ராஜூவும் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக மதுரையை 2-வது தலைநகராக்க வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக மதுரையில் 21ம் தேதி அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தாய்வில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட தொழில் வர்த்தகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க 2வது தலைநகராக்குவதற்கு ஏற்ப திருச்சியில் அனைத்து வளங்களும் உள்ளதாகவும், திருச்சியைத் தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறி உள்ளார். திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பது மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம் என்றும், எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை நிறைவேற்றுவது தான் சரியாக இருக்கும் என்றும் கூறி உள்ளார்.
2வது தலைநகரம் விஷயத்தில் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கொரோனா போரை தமிழக அரசு எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் 2வது தலைநகரம் குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதனிடையே 2ம் தலைநகராக மதுரையை அறிவிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் 2 – வது தலைநகரை அமைக்க கொங்குநாடு மக்கள் கட்சி ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி, சென்னை, திருச்சி, கோவை என்று மூன்று தலைநகரங்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *