சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.. மத்திய அரசு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-19

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து 60 நாள்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அரசிதழில் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதிக நுட்பமான கருத்துக்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ள இந்த வரைவு சட்டத்திருத்தம் குறித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் இந்த சட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் இயலாது. எனவே, கருத்து தெரிவிக்கும் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும். வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும். மேலும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு சட்ட அறிக்கை குறித்த அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வரைவு அறிக்கைக்கு பிற மாநில உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதால் இந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *