ராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி, அக்டோபர்-14

ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். அதேசமயம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட 23-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்தனர். மேலும் இன்பதுரையின் மனு தொடர்பாக திமுக வேட்பாளர் அப்பாவு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் ஒருவார காலம் விடுமுறை முடிந்து இன்று உச்ச நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. அப்போது, அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், இன்பதுரையின் மனுவை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *