பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது.. மகன் அபிஜித் முகர்ஜி ட்வீட்..!

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஆகஸ்ட்-19

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த 13-ம் தேதி பிரணாப்பின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். சுயநினைவின்றி உள்ள அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்கள் அனைத்து நல்வாழ்த்துக்களாலும், மருத்துவர்களின் தீவிரமான முயற்சியிலும், எனது தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், அவரது உடல்நிலையில் முன்னேற்றத்திற்கான சாதகமான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. அவரது உடலின் முக்கிய அளவுருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறிகள் கவனிக்கப்பட்டு வருகின்றன! அவர் விரைவாக குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *