தூத்துக்குடியில் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-18

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் இன்று (18.8.2020), மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர் எனவும், காவல் துறையினரைப் பார்த்த துரைமுத்து மற்றும் அவனது சகோதரன் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, காவல்துறையினர் அவர்களைத் துரத்திப் பிடிக்க முற்பட்டனர் எனவும், அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல் துறையினர் மீது வீசியதில், ஆடிநவார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் வந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அரசுப் பணி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 50 லட்சம் ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *