நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு ரூ.10,700 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்
நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு 10,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-18

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்-துடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி – கோதாவரி, குண்டாறு – வைகை, கருமேனியாறு இணைப்புத் திட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நதிநீர் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தினார். நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு 10,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். ஏனெனில், காவிரி என்பது தங்களுடைய விவசாயத்திற்கான நீராதாரமாக மட்டுமால்லாமல், குடிநீருக்கும் தேவைப்படுவதால், தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதனால் இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் முன்வைத்துள்ளார்.
காவிரி-கோதாவரி திட்டத்தை பொறுத்தவரையில், அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ‘நேஷனல் வாட்டர் டெவெலப்மென்ட் ஏஜென்சியானது’ மேற்கொண்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 200 டி.எம்.சி தண்ணீர் வழங்கவேண்டுமென பிரதமருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளதையும் முதல்வர் தற்போது மத்திய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கர்நாடகாவில் சில இடங்களில் ஒப்பந்தத்தை மீறி அணை கட்டக்கூடிய முயற்சியை அம்மாநில அரசு மேற்கொண்டுவருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், அதனை தடுப்பதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.