சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு..சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட குடிமகன்கள்..!
சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகள் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட்-18

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் 5 மாதத்திற்கு பிறகு இன்று காலை 10 மணியளவில் மால்கள், வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து சென்னையில் 720 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. காலை முதலே மதுபாட்டில் வாங்க டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம், கூட்டமாக காத்திருந்தனர். சரியாக காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால், டோக்கனை வாங்க குடிமகன்கள் முண்டியடித்தனர். இந்த கூட்டத்தை சமாளிக்க ஒவ்வொரு கடை முன்பு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக கடைகளின் ஊழியர்களும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி, குடிமகன்களை வரிசையாக நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பலரும் டோக்கன் வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அதே நேரத்தில் முக கவசம் அணியாமல் கடைக்கு வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இந்த நிலையில் பல இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததாலும், சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதாலும், டாஸ்மாக் கடைகள் முன்பு பதற்றமான சூழல் நிலவியது. கூட்டத்தை கட்டுப்படுத்த அவ்வபோது மைக் மூலமாக ஊழியர்கள் குடிமகன்களுக்கு அறிவுரை வழங்கிய வண்ணம் இருந்தனர். டாஸ்மாக் கடைகளில் ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடிமகன்கள் டோக்கன் வாங்கவும் சரக்கு வாங்கவும் கடைகள் முன்பு காத்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கடை திறக்கப்பட்டதால் ஏராளமானோர் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். டாஸ்மாக் கடை ஊழியர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து மதுபானங்களை விற்பனை செய்தனர். 50 வயதிற்கும் மேற்பட்டோர் மது விற்பனையில் ஈடுபடவில்லை. ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை டாஸ்மாக் கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். விற்பனையாளர்களும் சானிடைசர் போட்டு கையை கழுவிக்கொண்டனர். இது 60 சதவீத கடைகளில் பின்பற்றப்பட்டது. அதே நேரத்தில் மற்ற கடைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. மேலும், குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்ததால் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.