ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது.. நாஞ்சில் சம்பத்
ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே முடியாது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-18

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறினார். மேலும், பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும் எல்.முருகன் அறிவித்தார். இவரின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலானது.
எம்.முருகனின் இந்த அறிவிப்புக்கு நாஞ்சில் சம்பத் பதிலடிக் கொடுத்திருக்கிறார். மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றபோது கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியும் இன்னோவா காரையும் அன்றையை முதல்வர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கினார். பலரும் சமூக வலைதளங்களில் நாஞ்சில் சம்பத்தையும் இன்னோவா காரையும் குறிப்பிட்டு விமர்சிக்க தொடங்கினர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நாஞ்சில் சம்பத், பாஜக தமிழகத்தில் தரங்கெட்ட அரசியலை முன்னெடுக்க போவதாக குற்றம்சாட்டினார். எந்த விலைய கொடுத்தாவது வெற்றி பெற பாஜக நினைக்கிறது என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கே கார் பரிசு என்றால் , இன்னும் எந்த பாவத்தை எல்லாம் செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். பாஜகவினருக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன், இன்னோவா கார் இல்லை. ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே முடியாது. அவர்கள் பிழைக்கவும் முடியாது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.