தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-18

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. மேல்முறையீடு செய்யும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *