கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக அலுவலர்கள், பணியாளர்களை பாராட்டி அமைச்சர் S.P.வேலுமணி விருது

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதுகளை வழங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று(17.08.2020) சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊரகப் பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வட்டார அளவில் 431 பொறுப்பு அலுவலர்களும். கிராம ஊராட்சி அளவில் 12,525 பொறுப்பு அலுவலர்களும். நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் இதுவரையில், களப்பணியாளர்களுக்கு 1,78,851 முகக்கவசங்கள் மற்றும் 8,12,332 கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,74,222 கட்டடங்கள் ஊராட்சிகளால் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்கள் மற்றும் பொது கட்டடங்கள் உள்ளிட்ட 43,280 இடங்களில் கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இது வரையில் 21,411 கிருமி நாசினி தெளிப்பான்கள், 12,828 மஸ்தூர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், இதர ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 1,52,113 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் உள்ள நோய் கண்டறியப்பட்டவர்கள், ஊராட்சி பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, 2 மீட்டர் இடைவெளிவிட்டு நிற்க தேவையான கோடுகள், வட்டமிடுதல், சாரங்கள் முதலியன அனைத்து பொது இடங்களிளும் வரையப்படுகிறது விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து ஊராட்சிகளிலும் 116.29 இலட்சம் துண்டு பிரசுரங்கள், 12.98 இலட்சம் சுவரொட்டிகள், 1.75 இலட்சம் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் 7.19 இலட்சம் ஸ்டிக்கர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகள் ஊராட்சிகளினால் கொள்முதல் செய்யப்பட்டு களப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஊரகப் பகுதிகளில் அம்மா உணவகங்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், தேனி மாவட்டம் திருமலாபுரம் அரசு மருத்துவமனை வளாகம், திருவாரூர் மாவட்டம் தண்டலை அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி மருத்துவமனை வளாகம் ஆகிய 4 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் இந்த 4 அம்மா உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 850 நபர்கள் உணவருந்தி செல்கின்றனர். 24.03.2020 முதல் இது நாள் வரை சுமார் 1,23,630 நபர்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் முதலான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பெருமை படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஊரகப் பகுதிகளை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதில் தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது கடந்த 6 ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் மேலான தனிநபர் இல்ல கழிப்பறை கட்டப்பட்டதன் மூலம் தமிழகம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலமாக உருவாகியுள்ளது. கிராமம் தோறும் உள்ள சுகாதார ஊக்குநர்களும் இந்த நிலையை தக்கவைக்க தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 12,522 கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இப்பணியில் 66,130 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை காவலர்கள் சிறப்பாக செயல்படும் வகையில் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான பிரித்தல் மற்றும் சேமிப்பு கொட்டகைகள், குப்பைத்தொட்டிகள், குப்பைகளை கொண்டு செல்ல மூன்று சக்கரமிதிவண்டி, தள்ளு வண்டி, மின்கல வண்டி முதலியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் தூய்மை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நம் கிராமங்களை தூய்மையாக வைப்பதற்கும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் செயல்பட்டு வரும் தூய்மை காவலர்களின பங்கு அளப்பரியதாகும். இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் சுயநலம் கருதாமல் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தன்னலமின்றி நாட்டு நலனுக்காக அயராது செயல்பட்டுவரும் தூய்மை காவலர்களை இத்தருணத்தில் பாராட்டுவதிலும், அவர்களின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர் சித்ரா, திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அரக்கம்பக்கம் ஊராட்சியை சேர்ந்த மீனாட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிக்கராயப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த தே.சத்யா ஆகிய மூன்று தூய்மை காவலர்களுக்கு இன்றையதினம் விருது வழங்கி கௌரவிப்பதில் பெருமிதம் அடைவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ஆகஸ்டின் ராஜ், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சி. கதிரேசன், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெல்லிமலைபட்டினம் ஊராட்சி செயலாளர் எம். மாரப்பன் மற்றும் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், அய்யன்கோவில்பட்டி ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் கே.பாண்டுரங்கன் ஆகியோரையும் அமைச்சர் பாராட்டி விருதுகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *