சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எம்.பி. கனிமொழி, கமல் கடும் கண்டனம்..!

கொரோனா பரவல் எண்ணிக்கைகளில் பிற மாவட்டங்களோடு போட்டி போட வைக்கத்தான் சென்னையில் டாஸ்மாக் கடைகளை அரசு திறக்கிறதா என்று திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-17

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மே 7ம் தேதி முதல் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இதனால், நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் திறக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில் டாஸ்மாக் கடை திறப்புக்கு டிடிவி.தினகரன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டாஸ்மாக் திறப்பது குறித்து எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில்;- சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்? பிறமாவட்ட கொரோனா பாதிப்புடன் சென்னையை போட்டி போட வைக்க டாஸ்மாக் திறக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் டாஸ்மாக் கடை திறப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.மதுக்கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *