உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ரூ.811 கோடியில் 1,315 நீர்நிலைகள் புனரமைப்பு.. அமைச்சர் S.P.வேலுமணி
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ரூ.811 கோடியில் 1,315 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-17

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வீடு தோறும்சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிய 12 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் பொதுமக்களிடையே இந்நோய்த் தொற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள், வீடியோ குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களை பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நெம்மேலியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.1,259 கோடியிலான, நாள்தோறும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ரூ.811 கோடியில் 1,315 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த நீர்நிலைகளை சரியான முறையில் பராமரித்து பருவமழை காலங்களில் பொழியும் மழை நீர் சேகரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.