கேரள தங்க கடத்தல் விவகாரம்.. ஸ்வப்னா சுரேஷ் உட்பட 3 பேரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 26 வரை நீட்டிப்பு..!
கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா உள்ளிட்ட 3 பேரை 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொச்சி, ஆகஸ்ட்-17

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் தூதரக அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கொச்சி அமலாக்கப் பிரிவும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தங்க கடத்தலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் செயலாளருமான சிவசங்கரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சுரேஷ், சரித், சந்தீப் நாயர் ஆகியோரின் விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, அவர்கள் மூவரையும் அமலாக்கத்துறையினர் இன்று கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் மூவரையும் வரும் 26ம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரன், சுவப்னாவிற்கு இடையிலான தொடர்புகள் குறித்து மேலும் பல தகவல்களை அமலாக்கத்துறை வெளிக்கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.