இது மெஜாரிட்டி அரசு…ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி…

முண்டியம்பாக்கம், அக்டோபர்-12

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் பகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரோடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் உடனிருந்தார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, 2019-ம் ஆண்டில் மட்டும் 500 கோடி ரூபாய் மதிப்பில் 1,829 ஏரிகள் தூர்வாரப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திமுக ஆட்சியில் என்ன செய்யப்பட்டது என்றும் முதலமைச்சர் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் திண்ணையில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்காமல், தேர்தலுக்காக மட்டும் திண்ணைப்பிரச்சாரம் செய்கிறார் என சாடினார். திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஸ்டாலின் மக்களிடம் இருந்து பெறும் மனுக்களை என்ன செய்கிறார் என்றும் முதல்வர் பழனிசாமி வினவினார்.

விவசாயிகளுக்கு தேவையான நீர் மேலாண்மை திட்டத்தை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியதாக கூறினார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, 122 எம்.எல்.ஏ.க்களுடன் மெஜாரிட்டியோடு முதலமைச்சராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுகவையும் தம்மையும் விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *