டோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெற்றார்..!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி அறிவிப்பை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மும்பை, ஆகஸ்ட்-16

டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்காக சென்னையில் ஒரே ஓட்டலில் தங்கியுள்ளனர். ‘உங்களுடன் (டோனி) இணைந்து விளையாடிய நாட்கள் அருமையானது. முழு மனதுடன் இந்த பயணத்தில் உங்களது முடிவை (ஓய்வு) பின்பற்றுகிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை. ஜெய் ஹிந்த்’ என்று ரெய்னா தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் கூறியுள்ளார்.

33 வயதான சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 2005-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆடினார். அதன் பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 226 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 5 சதம் உள்பட 5,615 ரன்கள் சேர்த்துள்ளார். 18 டெஸ்ட் மற்றும் 78 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்குரியவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகினாலும், ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து விளையாடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *