சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார், தோனி..!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார்.

மும்பை, ஆகஸ்ட்-16

2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது.

இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட திட்டமிட்டு உள்ளார். சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 39 வயதான டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். அப்போது இந்திய அணிக்கு பேட்டிங்குடன் கூடிய விக்கெட் கீப்பர் தேவையாக இருந்தது. தனது அதிரடியான பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்த டோனி சில ஆண்டுகளிலேயே இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். அவரது தலைமையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் உச்சிமுகர்ந்தது. இந்த மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே கேப்டன் டோனி தான்.

‘கூல் கேப்டன்’ என்று வர்ணிக்கப்படும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு ‘தல’ என்றும் அவரை ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.

இந்திய அணிக்காக 350 ஒருநாள் ஆட்டங்களிலும், 90 டெஸ்ட் போட்டிகளிலும், 98 டி20 ஆட்டங்களிலும் தோனி விளையாடியுள்ளாா். ஒரு நாள் ஆட்டங்களில் 10,773 ரன்களும் (சராசரி 50.57), டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும் (சராசரி 38.09), டி20 ஆட்டங்களில் 1,617 ரன்களும் (சராசரி 37.60) அடித்துள்ளாா்.

தோனி மத்திய  அரசின் பெருமை மிகு ராஜிவ் காந்தி கேல் ரத்னா (2007), பத்ம  (2009), பத்மபூஷண் (2018) விருதுகள் வழங்கி கவரவிக்கப்பட்டுள்ளார். ஒருநாள்  போட்டிகளில் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை 2 முறை பெற்ற முதல் வீரர் (2008, 2009) என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனை வீரர்களுள் ஒருவராக பொன்னெழுத்துகளால் தனது பெயரை பொறித்து சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ள தோனிக்கு சக வீரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *