மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ளேன்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை, ஆகஸ்ட்-15

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எண்ணிலடங்கா தலைவர்களின் தியாகத்தால்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை நாம் பேணி காக்க வேண்டும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் ஆதரவற்றோரின் பசிப்பிணி போக்கும் அட்ஷய பாத்திரமாக தமிழக அரசு விளங்கி வருகிறது. முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து 6650 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை சரி செய்ய தமிழகம் முழுவதும் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. கொரோனாவை எதிர்கொள்ள 1800 மருத்துவர்கள் 7000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நீட் தேர்வு இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் எண்ணம். அரசுப் பள்ளி மாணவர்களுகு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் அன்பு, ஆதரவைப் பெற்றுள்ள நான் மக்களின் நல் வாழ்வையே குறிக்கொளாகக் கொண்டுள்ளேன். அல்லும் பகலும் மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *