நீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலாக காப்பாற்றிய 3 பெண்களுக்கு வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது..!

வீரதீர செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது, பெரம்பலூரை சேர்ந்த ஆனந்த வள்ளி, செந்தமிழ், முத்தம்மாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-15

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்தனர். அப்போது, நீர்த்தேக்க வடிகாலில் தவறி விழுந்த 4 பேரில், நீரில் மூழ்கி பயிற்சி மருத்துவர், பாலிடெக்னிக் மாணவர் என 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 இளைஞர்கள் உயிருக்கு போராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த அத்தியூர் அங்காளம்மன் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ்ச்செல்வி, அண்ணா மலை மனைவி ஆனந்தவள்ளி, ஆதனூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள் ஆகியோர் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து 3 சேலைகளையும் ஒன்றாகக் கட்டி ஒரு முனையை தண்ணீ ரில் வீசி, மறுமுனையை மூவரும் பிடித்துக்கொண்டு தண்ணீரில் தத்தளித்த மற்ற 2 இளைஞர்களையும் மீட்டனர்.

கொட்டரை நீர்த்தேக்கத்தில் குளிக்க வந்த சிறுவாச்சூரைச் சேர்ந்த பலரும், மீட்கப்பட்ட 2 இளைஞர்களும் தாங்கள் மீட்கப்பட்ட விதம் குறித்து பலருக்கும் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, இருவரையும் மீட்ட 3 பெண்களுக்கும் பாராட்டு குவிந்தது. இதையடுத்து, தண்ணீரில் மூழ்கிய 2 இளைஞர்களை உயிருடன் மீட்ட 3 பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், 74வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியற்றினார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இதைத்தொடந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்களின் முழு விவரம் ;-

  • கொரோனா நோய் தொற்றின் சங்கிலியை உடைத்த சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது
  • புதுமையான உத்தியை கையாண்டு நுண்ணீர் பாசனத்தில் சிறந்து விளங்கும் வேளாண் துறைக்கு நல் ஆளுமை விருது
  • கொரோனா காலத்தில் தடையின்றி மருந்து கிடைக்க செய்த மருத்துவ சேவை கழகத்திற்கு நல் ஆளுமை விருது
  • ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது தரப்பட்டது

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

  • பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது
  • கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது

மாற்று திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது

  • சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு தொண்டு நிறுவனத்திற்காக விருது
  • சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது
  • அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது
  • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது வழங்கப்பட்டது
  • கோவை கோதணவள்ளிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது
  • கடலூர் கிரீடு நடனசபாபதிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவன விருது
  • உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *