காஷ்மீர் பற்றி இரு தலைவர்களும் பேசவில்லை-விஜய் கோகலே

சென்னை, அக்டோபர்-12

பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

இந்தியா – சீனா இடையே இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை பற்றி விவாதிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இந்த உயர்மட்டக் குழுவில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெறுவார்.

இந்தியா – சீனா இடையே உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பு, பயங்கரவாத, அடிப்படைவாத சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களும் பேசப்பட்டன.

பண்டைய காலத்தில் தமிழகத்திற்கும் சீனாவின் பியூஸியான் மாகாணத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றியும், தற்போது நேரடித் தொடர்பை ஏற்படுத்துவது பற்றியும் இரு நாட்டு தலைவர்களும் பேசினர். கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்களுக்கு அதிக வசதிகள் செய்து கொடுப்பது குறித்து இது தலைவர்களும் கலந்துரையாடினர். சீனாவில் உள்ள தமிழ் ஆலயங்கள் பற்றி ஆய்வு செய்வது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மாமல்லபுரம் – சீனா இடையே கலாசார – வர்த்தக தொடர்புகள் நீண்ட நெடுங்காலமாக இருப்பதை மோடி அறிந்துவைத்துள்ளார். எனவே, சீன அதிபருடனான அலுவல்சாரா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில்தான் நடைபெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். மாமல்லபுரத்தைத் தேர்வு செய்ததும் பிரதமர் மோடிதான். மாமல்லபுரத்தை தவிர வேறு ஒரு இடத்தில்தான் இந்த சந்திப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியதாகக் கூறப்படும் தகவல் உண்மையில்லை.

உலகமே வியந்து பார்க்கும் மாமல்லபுரத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசும் விரும்பியது. சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் தமிழில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். சென்னையில் சீன துணை தூதரகம் அமைப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இரு தலைவர்களின் சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசப்படவில்லை. இரு நாடுகள் இடையே ராஜாங்க ரீதியிலான உறவை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீனா வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மோடியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மோடி சீனா செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சிறப்பான வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு ஜின்பிங் நன்றி தெரிவித்தார் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *