இந்தியாவிலேயே முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க அம்மா கோவிட் – 19 திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்

இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம் செலுத்த வேண்டும்.

சென்னை, ஆகஸ்ட்-14

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் 30 எல்இடி வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதல்வர் குரல் பதிவில் வாழ்த்து கூறும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.33 கோடி மதிப்பீட்டில் 37 பாலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் (TUFIDCO) 2019-2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால ஈவுத் தொகையான 7.44 கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று (14.08.2020) அமைச்சர் வேலுமணி முதல்வரிடம் வழங்கினார்.

கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன்மூலம் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளது. அதன்படி, 14நாட்கள் தனிமையில் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான முழு மருத்துவ உதவிகள் வழங்கப்படும். மேலும், 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்பமானி, மாத்திரைகள், 14 முகக்கவசம், கிருமி நாசினி அடங்கிய தொகுப்புகளை 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில், இதற்காக இலவச தொடர்பு எண்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவிகிதம் பேர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் இல்லத்திற்கே சென்று சிகிச்சை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சென்னையில் தொடங்கி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *