திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்… மு.க.ஸ்டாலின் அதிரடி
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக கு.க.செல்வம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-13

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் கு.க.செல்வம். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்திற்கு சென்ற திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவரை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பாஜக தலைவரை சந்தித்ததும் உடனடியாக கட்சியில் இருந்து கு.க செல்வத்தை இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.