தேசியக்கொடி அவமதிப்பு விவகாரம்.. எஸ்.வி.சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
நடிகரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-13

பா.ஜ.க – வை சேர்ந்த எஸ்.வி. சேகர் சமீபத்தில் அதிமுக அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். மேலும், ‘காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியை தான் ஆகஸ்டு 15ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக்கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுகிறாரா ? தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்.’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றினை அளித்திருந்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய சின்னங்கள் அவமதிப்பை தடுக்கும் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தண்டனை உறுதியானால் 3 வருடம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.