அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு – 19 லட்சம் பேரின் பெயர் இல்லை

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

கவுகாத்தி, ஆக-31

அசாமில் வசிக்கும் சட்டபூர்வ இந்திய குடிமக்களை அடையாளம் காணவும், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்த சட்ட விரோத குடியேறிகளை கண்டறிந்து அகற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.

இந்நிலையில், அசாமில் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்திய குடிமக்களாக இடம்பெற்றுள்ளனர். அசாமில் தற்போது வசிக்கும் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் இடம்பெறவில்லை. அசாமில் இன்று வெளியிடப்பட்டிருப்பது இறுதி செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு என்றாலும், அதில் சேர்க்கப்படாத, 19 லட்சம் பேருக்கும் மேல்முறையீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தெரிவித்துள்ளார்.

இந்த சட்டபூர்வ வாய்ப்புகள் முடியும் வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் வெளிநாட்டவர்கள் என அறிவிக்கப்பட மாட்டார்கள். பதிவேடு விவரங்களை www.nrcassam.nic.in தெரிந்து கொள்ளலாம். தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, அசாமில் பாதுகாப்பிற்காக ஆயிரக் கணக்கான துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர். இதேபோல மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *