எனது தந்தை இறக்கவில்லை.. வதந்திகளை நம்பாதீர்கள்.. பிரணாப் முகர்ஜி மகன் தகவல்..!

எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஆகஸ்ட்-13

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இன்று காலையில் இருந்து டுவிட்டரில் #ripPranabMukherjee என் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது. இந்நிலையில் எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *