பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு.. அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு..!!

சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட்-11

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ;-

சொத்துகளில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.சமூக நீதியை காப்பாற்றும் விதமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ;-

பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தான் வரவேற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு வலுசேர்ப்பதாக இந்த தீர்ப்பு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ;-

பூர்வீக சொத்துகளில் ஆண்களுக்கு வழங்குவது போல சம அளவு பங்கு பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பெண்ணுரிமையை நிலைநிறுத்தும் விதமாக அமைந்திருக்கும் இந்த தீர்ப்பினை வரவேற்கின்றேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் :-

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்ற சட்டத்தை 1989-லேயே கருணாநிதி கொண்டு வந்தார்.நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன். அனைத்து தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ;-

இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2005-ஆம் ஆண்டில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி குடும்பச் சொத்துகளில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என்பது சட்டமானது. ஆனாலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு பிறந்த பெண்களுக்கு மட்டும் தான் குடும்பச் சொத்துகளில் பங்கு உண்டு என்றும், வாரிசுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு முன் குடும்பத் தலைவர் இறந்திருந்தால், அவரது சொத்தில் மகள்களுக்கு பங்கு இல்லை என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்க இத்தகைய வாதங்கள் முட்டுக்கட்டையாக இருந்தன. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு சொத்து கிடைப்பதில் உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து இருக்கிறது. பெண்கள் எப்போது பிறந்திருந்தாலும் அவர்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு உண்டு; தந்தை எப்போது இறந்திருந்தாலும் அவரது சொத்தில் அவரது பெண் வாரிசுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் காரணம் காட்டி பெண்கள் சொத்துரிமையை இனி யாரும் மறுக்கமுடியாது. அந்த வகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது.

பெண்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்னும் கேட்டால் ஆண்களை விட அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

ஒரு குழந்தையின் பெயருக்கு முன்னால் முதலில் தாய் பெயரின் முதல் எழுத்தையும், அதன்பிறகே தந்தை பெயரின் முதல் எழுத்தையும் முதலெழுத்தாக (இனிஷியலாக) வைத்துக் கொள்ள வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது; கட்சியினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. லட்சக்கணக்கான பாட்டாளி சொந்தங்கள் இந்த முறையைத் தான் கடைபிடித்து வருகின்றனர். இந்த முறையை பா.ம.க. கடைபிடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து தான் தாயார் பெயரின் முதல் எழுத்தையும் முதலெழுத்தாக (இனிஷியலாக) வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு ஆணையிட்டது.மகளிரின் உரிமைகளுக்காக போராடுவதிலும், வென்றெடுப்பதிலும் தமிழகத்தின் முன்னோடி பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் மகளிருக்கு சொத்துரிமை வழங்குவதில் உள்ள தடைகளை அகற்றி உள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ;-

“இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை, மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகிறது என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு 2018 பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பு அளித்தது. தற்போது இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதி செய்து, இன்று வழங்கி இருக்கின்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

மகள் எப்போதுமே அன்புக்குரிய மகள்தான், தங்களது வாழ்நாள் முழுவதும் என நீதிபதி அருண் மிஸ்ரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது. 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து உரிமை, வாரிசு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின்னர் 1989ல் கருணாநிதி முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார்.இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். கருணாநிதி பெண்கள் சம உரிமை பெற 1989ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *