அனைத்து மாநகராட்சிகளிலும் விரைவில் ரோபோக்கள் – அமைச்சர் S.P.வேலுமணி தகவல்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தும் முதன்மை மாநகரமாக கோவை உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அண்மையில் நிறைவுற்ற கோவை உக்கடம் பெரியகுளக்கரை நவீனபூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, கோவை, பாராட்டு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கோவை மாநகரில் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை எந்திரம் மூலம் அகற்றுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தும்  முறையை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி அடைப்புகளை அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், இப்பணியில் ரோபோக்கள் பயன்படுத்தும் திட்டம் அனைத்து மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களிலும் தலா ஒன்று  வீதம் ,மொத்தம் 5 ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை எந்திரம் மூலம் அகற்றுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தும்  முறையை புதுமையாக செயல்படுத்தியுள்ள கோவை மாநகராட்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ட்விட்டர் வழியாக  பாராட்டியுள்ளது. மனிதர்கள் மூலம் சாக்கடை கழிவுகளை அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலும் கோவை மாநகராட்சி ரோபோக்களை (Robotic Machines- Bandicoot V2.0) பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களின் செயல்பாடுகள் இல்லாத வகையில், உருவாக்கப்பட்ட இந்த ரோபோ (The bandicoot Robot), மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது என்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை  குறிப்பிட்டுள்ளது. இந்த ரோபோக்கள் பயன்படுத்தும் திட்டம் மற்ற நகரங்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் என்றும் இத்திட்டத்தை பின்பற்றி, தூய்மைப் பணியாளர்களின் வேலைகளை மேம்படுத்தி, பாதாள சாக்கடைக் குழிக்குள்  மனிதர்கள்  இறங்கி அடைப்புகளை அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது   மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் பாராட்டை பெற்ற கோவை மாநகராட்சிக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டர் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கோவையை மற்ற நகரங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக முன்னிலைப்படுத்திய  மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்த திட்டத்தை ( பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்துதல்) தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகளிலும் செயல்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை தொடர்ந்து அளித்து வரும் ஆதரவாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *