முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்.. ராணுவ மருத்துவமனை தகவல்…!!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டெல்லி, ஆகஸ்ட்-11

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு ராணுவ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் மிகப்பெரிய ரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக பிரணாப் முகா்ஜி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னோடு தொடா்பில் இருந்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தாா் என்பது, குறிப்பிடத்தக்கது.