கொரோனா தடுப்பு பணிக்காக உடனடியாக ரூ. 3000 கோடி தேவை.. பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தமிழகத்துக்கு கொரோனா நிதி ரூ.3,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-11

கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி, அவசரகால நிலையை எதிர்கொள்ள மற்றும் மருத்துவ அமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய ரூ.712.64 கோடியில், இதுவரை இரண்டு தவணைகளாக ரூ.512.64 கோடி நிதி மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது நான் முன்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியதைப்போல ரூ.3,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.9,000 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கினால், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதேவேளை, 2020 ஏப்ரல் – ஜூன் காலகட்டத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிதி முழுவதும் தீர்ந்துவிட்டதால், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும். நிலுவையில உள்ள நெல் கொள்முதல் மானியத் தொகை ரூ.1,312 கோடியை உடனடியாக விடுவித்தால், நெல் கொள்முதல் பணிகளை விரைவாக செயல்படுத்த பேருதவியாக இருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *