அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? .. அமைச்சர்கள் மோதல்..!!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-11

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று அதிரடியாக பதிலளித்திருந்தார். மதுரை மாவட்டம் பரவையில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று பதிலளித்திருந்தார். இதனால், முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமலேயே அதிமுக களமிறங்கப்போகிறதா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்;
எடப்பாடியாரை முன்னிறுத்தி
தளம் அமைப்போம்.
களம் காண்போம்;
வெள்ளி கொள்வோம்;
2021-ம் நமதே
என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்சனைக்கு முதல்வரும், துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தலுக்கு பின் முதல்வரை தேர்வு செய்தால் பிரச்சனை வரும். குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் யார் முதல்வர் என்பதில் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.