தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரிப்பு.!!

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-11

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து வருகின்றனர்.

கடந்த 3ம் தேதி முதல் தினசரி 100க்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து வருகின்றனர். கடந்த 7 நாட்களாக தினந்தோறும் 100 முதல் 120 உயிரிழப்புகள் பதிவாகிறது. தமிழகத்தில் நேற்றும் கொரோனா பாதிப்பால் 114 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை சேர்த்து தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நேற்று மட்டும் 67,153 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 5,914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 976 பேர், காஞ்சிபுரத்தில் 310 பேர், செங்கல்பட்டில் 483 பேர் உள்ளிட்ட 5914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,532 பேர் ஆண்கள். 2,382 பேர் பெண்கள். தற்போது வரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 779 ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 7 பேர் பெண்கள். 29 பேர் திருநங்கைகள். இதேபோல, நேற்று மட்டும் 6037 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 53,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 34 பேர், அரசு மருத்துவமனையில் 80 பேர். சென்னையில் மட்டும் 25 பேர், கோவை மற்றும் கன்னியாகுமரியில் 7 பேர், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேர், நெல்லை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், திருச்சியில் 2 பேர், திருவாரூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 114 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் எந்தவித இணை நோய்களும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். 105 பேர் இணை நோய்களுடன் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5041 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *