சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை எதிர்ப்பது தேவையில்லாதது.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை முன்னதாகவே எதிர்ப்பது தேவையில்லாதது, முதிர்ச்சியின்மையானது என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-10

மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் இருந்து மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது ஒரு பேரழிவு, மக்கள் இதற்கு எதிராக உடனடியாக போராட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறுகையில் ‘‘சில தலைவர்கள் இதற்கு எதிராக போரட்டம் நடத்த இருப்பதாக கூறியதை பார்க்க முடிகிறது. வரைவு திட்டத்திற்கு எதிராக அவர்கள் எப்படி போராட்டம் நடத்த முடியும். இது இறுதி அறிவிக்கை இல்லை. பொது மக்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள 150 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இது கொரோனா காலம் என்பதால். இல்லை என்றால் விதியின்படி 60 நாட்கள்தான் கொடுக்கப்படும்.நாங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளோம். அதை வரவேற்கிறோம். அந்த ஆலோசனைகளை நாங்கள் பரிசீலிப்போம். அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு இறுதி அறிவிக்கை வெளியிடப்படும்.
ஆகவே, மக்கள் வரைவு அறிவிக்கையை பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானது அல்ல. தற்போது போராட நினைப்பவர்கள், அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் எந்தவித ஆலோசனைகளும் இல்லாமல் பெரிய முடிவுகளை எடுத்தவர்கள். இது தேவையில்லாதது. முதிர்ச்சியில்லாதது.’’ என்றார்.