தமிழக அரசு எல்லா நேரத்திலும் விவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டும்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட்-10

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 15 கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற14 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 20 கோடியே 86 லட்சம் மதிப்பில் 60 பணிகளுக்காக அடிக்கல் நாட்டியதோடு, 15 ஆயிரத்து 16 பேருக்கு 33 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் வைரஸ் பரவல் தடுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளை அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்ற இந்த தருணத்தில் தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு அறிவிக்கின்ற ஆலோசனையை நம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் பின்பற்றி வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரதானமாக கொண்டு உருவாகப்பட்டுள்ளது. இங்கு சட்டத்துறை அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க, ஏழை எளிய மக்களின் நன்மைக்காக மாவட்டம் தோற்றுவிக்கபட்ட ஆறே மாதத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ளது. இது வைத்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. ஊட்டியில் ரூ.48 கோடியில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. கால்நடைப்பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கால்நடைப்பூங்கா மூலமாக உயர்ரக பசுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ரூ .1000 கோடியில் கள்ளக்குறிச்சியில் கால்நடைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
விவசாயிகள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அதிமுக அரசு நேசக் கரம் நீட்டி உதவும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பொருட்களை பாதுகாத்து விற்பனை செய்ய நடவடிக்கை. விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகின்றன. கால்நடை பூங்கா விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.பருவமழை நீர் வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.