இது இந்தியாவா? “இந்தி”-யாவா?- மு.க.ஸ்டாலின் காட்டம்
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-10

இந்தி தெரியாததால் தன்னை இந்தியரா? என விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கேட்டதாக, கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். மேலும், இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது கண்டனப் பதிவுகளை தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோரைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கனிமொழி, எம்.பி.யைப் பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!’ என்று பதிவிட்டுள்ளார்.