தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-10

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 69.33% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.00% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 28.66% ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகள், பொது போக்குவரத்து தொடக்கம் மற்றும் பள்ளிகள் திறப்பு, ரயில், விமான சேவை குறித்தும் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.