அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?.. செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
அதிமுக கொள்கையை பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை முதலமைச்சர் என்று அறிவிக்கிறார்களோ அவர் தான் முதல்வர். இதில், எந்த மாற்று கருத்தும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை, ஆகஸ்ட்-10

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் காலம் வருகிற 2021ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. தொகுதிகளில் புதிய பொறுப்புகள் அளிப்பது என சமீபத்தில் இரு கட்சிகளிலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இருப்பினும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பது அனைவரும் அறிந்ததுதான். மறுபக்கம், ஆளும் கட்சி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? இல்லை வேறு நபர் முன்னிருத்தப்படுவாரா? என்ற கேள்வியும் இருக்கிறது.
இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடியாக பதிலளித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவையில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று பதிலளித்துள்ளார்.