சென்னை – போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சென்னை – அந்தமான் இடையே கடலுக்குள் ரூ.1,224 கோடியில் செயல்படுத்தப்பட்ட கண்ணாடி இழை கேபிள் திட்ட சேவையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சென்னை, ஆகஸ்ட்-10

சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 2300 கி.மீ. தூரத்திற்கு கடலுக்கு அடியில் கண்ணாடி நூலிழை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த மைல் கல்லாகப் பார்க்கப்படும் இந்த திட்டத்தினால், அந்தமான் தீவுகளில் மக்களுக்கு அதிவிரைவான தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்கும். ரூ.1224 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று காலை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சென்னை – போர்ட் பிளேயருக்கும், போர்ட் பிளேயரில் இருந்து லிட்டில் அந்தமான், கார்நிகோபர், கமோர்தா, கிரேட் நிகோபர் போன்ற இடங்களுக்கும் அதிவிரைவான மொபைல், இணையதள சேவைகள் கிடைக்கும்.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்ததை அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன்.இந்த திட்டத்தின் மூலம் அந்தமான், நிகோபார் பகுதிகளுக்கு அதிவிரைவு இணையதள வசதி கிடைக்கும். இதனால் ஆன்லைன் வகுப்புகள், சுற்றுலா, வங்கி, ஷாப்பிங் அல்லது டெலிமெடிசின் அனைத்திலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன் பெறுவர். அதிநவீன இணையதள வசதியால் அந்தமானில் சுற்றுலாத்துறை மேம்படும். அந்தமானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியின் பெரும் நன்மையைப் பெறுவார்கள், ஏனெனில் எந்தவொரு சுற்றுலா தலத்திற்கும் சிறந்த இணையதள வசதி முன்னுரிமையாகிவிட்டது.மொபைல் மற்றும் இணைய இணைப்பின் முக்கிய சிக்கல் இன்று தீர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, சாலை, காற்று மற்றும் நீர் வழியான இணைப்புகளும் அந்தமானுடன் பலப்படுத்தப்படுகிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *