நியூசிலாந்தில் 100 நாட்களாக யாருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை.. பிரதமர் ஜெசிந்தாவின் அதிரடியால் கட்டுக்குள் வந்த பாதிப்பு..!!

நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக நாட்டு மக்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வெலிங்டன், ஆகஸ்ட்-9

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க மொத்தமாக 19,854,324 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 730,519 பேர் பலியாகி உள்ளனர். அமேரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா என்று உலகின் பெரிய நாடுகள் எல்லாம் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்தியதால் நியூசிலாந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு வருபவர்கள் சிலருக்கு தொற்று உறுதியாகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் முறையாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

நியூசிலாந்தில் தற்போது 23 பேர் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போது பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் சுகாதார நடவடிக்கைகளை மக்கள் கைவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

மற்ற நாடுகள் செய்யாத தவறை நியூஸிலாந்து தவிர்த்தது. லாக்டவுன் போடப்பட்டாலும், மக்களுக்கு அடிப்படையை வசதிகள், பொருட்கள் கிடைக்க நியூசிலாந்து ஏற்பாடு செய்தது. மக்களுக்கு போதுமான நிவாரண நிதியை அளித்தது. லாக்டவுனில் எந்த விதமான தளர்வையும் அமல்படுத்தவில்லை. என்ன நடந்தாலும், காண்டாக்ட் ட்ரேஸிங் மற்றும் டெஸ்டிங்கில் சின்ன தவறை கூட செய்ய விடாமல் தடுத்தனர். அதன்பின் மக்களுக்கு கொரோனா குறித்த மிக சரியான புரிதலை ஏற்படுத்தி மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி என்று அனைத்தையும் உறுதிப்படுத்தினர். அந்நாட்டின் குடிமகன்கள் எல்லோருக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டது. இந்த கடுமையான கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல்தான் கொரோனாவிற்கு எதிராக நியூசிலாந்தின் வெற்றிக்கும் காரணம் ஆகும். இந்த வெற்றிக்கு பின் இருக்கும் ஒரே நபர்..அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மட்டுமே! பிப்ரவரி 26ம் தேதி நாட்டிற்குள் முதல கொரோனா கேஸ் வந்ததும் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அதிரடியாக நாட்டிற்குள் கட்டுப்பாடுகளை விதித்தார்.மற்ற நாடுகளை போல நானும் லாக்டவுன் போடுகிறேன், என்று லாக்டவுன் கொண்டு வராமல் மிக மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் நியூசிலாந்தில் லாக்டவுன் விதிக்கப்பட்டது. பொருளாதாரம் மோசமானால் கூட பரவாயில்லை, கண்டிப்பாக கொரோனாவை தடுக்க வேண்டும் என்று மிக கடுமையான ஊரடங்கை அமல்படுத்தினார் ஜெசிந்தா.

பிரதமர் ஜெசிந்தாவின் இந்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, நியூசிலாந்து கொரோனாவை வென்று காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *