இந்தி தெரிந்தால்தான் இந்தியரா..?.. கனிமொழி ட்விட்டால் பரபரப்பு..!!
திமுக எம்பி கனிமொழியிடம், இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா என்று சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டது தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-9

சென்னை விமான நிலையத்திற்கு சென்ற திமுக எம்பி கனிமொழியிடம், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எஃப்) பெண் அதிகாரி ஒருவர், கனிமொழியிடம் ஏதோ இந்தியில் கேட்க, அதற்கு, தனக்கு இந்தி தெரியாது என்பதால், ஆங்கிலம் அல்லது தமிழில் கேட்குமாறு கனிமொழி கோரியுள்ளார். அதற்கு அந்த பெண் அதிகாரி, நீங்கள் இந்தியரா? என்று தன்னை கேட்டதாக கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், எப்போதிலிருந்து இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது என்றும் கனிமொழி கேள்வியும் எழுப்பியுள்ளார்.
கனிமொழியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்-இன் கொள்கையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில் இருக்கும் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் மொழி குறித்த எந்த கேள்வியையும் எழுப்பமாட்டார்கள் என்றும் சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.