மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு..!

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 5 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம், ஆகஸ்ட்-9

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 5 பேரின் உடல் மீட்கப்பட்டதாக் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 36 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி கயத்தாறு பகுதியை சேர்ந்த 40 குடும்பங்கள் தங்கியிருந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி கனமழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *