உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணிக்கு ஈழுவா தீயா சமூகத்தினர் நன்றி

தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் ஈழுவா தீயா சமூகத்தினர், தங்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினராக அங்கீகரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.கடந்த சட்டசபை தேர்தலின் போது , தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று. தமிழகத்தில் வாழும் ஈழுவா தீயா சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 27.7.2020 அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் வாழும் ஈழுவா தீயா சமுதாயத்தினரை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினராக அங்கீகரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார். அந்த சமூகத் தினருக்கு பிற்பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ஈழுவா தீயா சமுதாயத்தினருக்கு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான சான்றிதழ்களை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிலையில் தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்கள் சார்பில் கோவை குனியமுத்தூரில் ,தங்கள் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பரிந்துரை செய்த தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தினர். தங்களது 44 ஆண்டுகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியதற்காக விழாக் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு நடைபெற்ற விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மறைந்த இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார். சாதி, மத பேதமின்றி மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.