திமுகவின் அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம்.. அமைச்சர் ஜெயக்குமார் திடீர் அழைப்பு..!

திமுகவின் அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. துரைமுருகன் அதிமுக வந்தால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் திமுக மூத்த தலைவர் துரைமுருகனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-8

சென்னையை அடுத்த மாதவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறினார். குறிப்பாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கு.க செல்வம் எம்.எல்.ஏ. திமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், திமுகவில் செல்வத்தைப் போல் மற்றவர்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், அடுத்ததாக துரைமுருகன் அக்கட்சியிலிருந்து வெளியேற இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கட்சியின் பொருளாளராக இருக்கக்கூடிய துரைமுருகன், திமுகவுக்கு பொதுச்செயலாளராக வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாகவும், தற்போது அது கிடைக்காது என்பதால், அந்த ஏக்கத்தில் அவர் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். திமுகவில் இருந்து யார் வந்தாலும் கட்யின் ஆலோசனைக்கேற்ப அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக கூறினார். துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும்.அதிமுக ஒரு ஆலமரம்; திமுகவின் அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. துரைமுருகன் அதிமுக வந்தால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம்.. அதிருப்தியில் உள்ள திமுகவினர் யார் வந்தாலும் அதிமுக நிழல் கொடுக்கும் என கூறினார்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுக வந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்த நிலையில், இப்போது அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *