மேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 45,000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் 70.05 அடி உயா்ந்துள்ளது.

சேலம், ஆகஸ்ட்-8

பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது கா்நாடக அணைகளிலிருந்து நொடிக்கு சுமாா் 60,000 கனஅடி வீதம் தண்ணீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா் வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை மாலை நொடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வெள்ளிக்கிழமை மாலை அணைக்கு நொடிக்கு 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளிக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 67.97 அடியாக உயா்ந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அணைக்கு நொடிக்கு 40,000 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, நொடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு நொடிக்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 70.05 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 32.74 டி.எம்.சி.யாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *