கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்.. 191 பேர் கதி என்ன?..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்பட 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமானநிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று விபத்து நடந்துள்ளது.

கோழிக்கோடு, ஆகஸ்ட்-7

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் படி மத்திய அரசால் ஏர் இந்தியா விமானம் துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 4 விமான பணி பெண்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர்.
ஏர் இந்தியா விமானம் (1X -1344) துபாயில் இருந்து 184 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உள்பட 191 பேரை ஏற்றிக் கொண்டு கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு இன்று இரவு வந்தது. இந்த விமானம் இன்று இரவு 7.45 மணிக்கு கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. கன மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் விமானம் வழுக்கி சறுக்கி அருகில் இருந்த குழியில் போய் இறங்கி மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விமானமே இரண்டாக பிளந்து விட்டது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விமான விபத்ததில் விமானி , துணை விமானி உள்பட 11 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 45 பயணிகள் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 174 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரன்வேயில் இருந்து தள்ளி விமானம் பள்ளத்தில் விழுந்துள்ளது. கனமழை காரணமாக மீட்பு பணிகள் சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்களின் பெயர் விவரமும் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் வந்துள்ளனர்.

விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய கோழிக்கோடு நிர்வாகம் சார்பில் 0495-2376901 என்கிற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துகுள்ளனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமான போக்குவரத்துதுறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மீட்புபணிகளுக்கான அனைத்துவித நடவடிக்கைகளை விரைந்து எடுக்கமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து வேதனை அளிப்பதாகவும் மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கேளத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன். மீட்புப் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்கு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கேரள கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நண்பர்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *