தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஆக-31

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வங்க கடலில் தென்கிழக்கு மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் வருகிற 2-ஆம் தேதி வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 72 மணி நேரத்தில் அந்தமான் நிகோபர், கேரளா மற்றும் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று பகல் வெயில் காய்ந்த நிலையில் மாலையில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராயநகர், அடையாறு என நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தாம்பரம் , குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகரிலும் மழை பெய்தது. மாமல்லபுரம், கோவளம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *