மசூதி திறப்பு விழாவுக்கு செல்ல மாட்டேன்.. யோகி ஆதித்தயநாத் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

அயோத்தியில் திறக்கப்பட உள்ள மசூதியின் தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

லக்னோ, ஆகஸ்ட்-7

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று முன்தினம் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி கலந்து கொண்டனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான விழாவில் கலந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த ஆதித்யநாத், “ஒரு முதல்வராக, எனக்கு எந்த நம்பிக்கை கொண்டவர்கள் மீதோ, மதத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ பிரச்னை இல்லை. அதே நேரத்தில் ஒரு யோகியாக, மசூதியின் தொடக்க விழாவுக்கு நான் போக மாட்டேன். ஒரு இந்துவாக எனக்கு உகந்ததை செய்யும் உரிமை உள்ளது.நான் மசூதி விவகாரத்தில் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டவன் இல்லை. அதனால்தான், அந்த தொடக்க விழாவுக்கு நான் அழைக்கப்படவும் மாட்டேன். நான் போகவும் மாட்டேன் எனக் கூறுகிறேன்.அப்படி அவர்கள் என்னை அழைத்தால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும். ஆகவே, மதச்சார்பின்மைக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்கப் பெற தொடர்ந்து பணி செய்வேன்.
இஃப்தார் நோம்புகளில் தொப்பி போட்டுக் கொண்டு கலந்து கொள்வது மதச்சார்பின்மை கிடையாது. அது போலியானது என்பது மக்களுக்குத் தெரியும். உண்மை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். ராமர் கோயிலைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி, எந்த முடிவும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தது. பிரச்னை தீர்ந்துவிடக் கூடாது என்று நினைத்தது. அரசியலுக்காக அவர்கள் அப்படி நினைத்தார்கள்.” என கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ‘‘யோகி ஆதித்யநாத், ஒரு மாநிலம் முழுவதற்கும் முதல்வர் ஆவார். இந்து சமூகத்துக்கு மட்டும் அவர் முதல்வர் அல்ல. இப்படி இருக்கையில், அவரின் வார்த்தைகள் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உத்தர பிரதேச மாநில மக்களிடம் யோகித் ஆதித்ய நாத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *