தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நெல்லை, ஆகஸ்ட்-7

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தபிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை, தென்காசியில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போது வாய்ப்பில்லை. இ-பாஸ் முறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும். அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும். சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனைபோல், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின் .கீழ் விவசாயிகளுக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்களை அதிகரிக்கப்பட்டுள்ளன. நெல்லையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.1000 கோடியில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. ராதாபுரம் கால்வாய் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் குடிமராத்துப் பணிகள் நிறைவடையும்.

தாமிரபரணி -நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் 4-ம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும். சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரூ.6,448 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் அரசு, கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தென்காசி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் 75% நிறைவடைந்துள்ளது. நெல்லையில் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்பதே நோக்கம். நெல்லை, தென்காசி மாவட்ட விவசாயிகள், தொழில் துறையினர் அளித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

திமுகவை அரியணையில் ஏற்ற மு.க.ஸ்டாலின் சூளுரைத்தது பற்றிய கேள்விக்கு, தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *